சர்க்கரை நோயாளிகளே உஷார்! சர்க்கரை நோய்க்கும் வேர்க்குருவிற்கும் இடையே என்ன தொடர்பு ...?
Diabetics What is the connection between diabetes and acne
வெயில் காலத்தில், பொதுவாக சிலருக்கு வேர்க்குரு பிரச்சினையால் உடலில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். இப்பிரச்சினை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும்போது, அரிப்பு அதிகமானால் ஒருவித பயமும் ஏற்படுகிறது.மேலும், வேர்க்குருவிற்கும் சர்க்கரை நோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறதா? இதனை தடுக்க என்ன வழி? என பல கேள்விகள் சர்க்கரை நோயாளிகளிடம் ஏற்படுகிறது.அதற்கு தீர்வு காண இதைப் படியுங்கள் ...

வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக ''மிலியாரியா'' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.
கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது. இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும்.
வேர்க்குரு ஏற்பட முக்கிய காரணங்கள்:
வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், நீரிழிவு நோய்,காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம். இதில் சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.
இதை தடுக்க வழிமுறைகள் :
காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணியக்கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.
நீர்ச்சத்து உணவுகள்:
வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்தபட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது நல்லது. நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளலாம். தினமும் குறைந்தபட்சம் 2 முறையாவது குளிப்பது நல்லது. புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும்போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தாலோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.
English Summary
Diabetics What is the connection between diabetes and acne