கோவில்பட்டி அருகே பள்ளி பேருந்து விபத்து: ஒருவர் பலி, மாணவிகள் படுகாயம்! 
                                    
                                    
                                   kovipatti school bus accident 
 
                                 
                               
                                
                                      
                                            தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பள்ளி மாணவிகள் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
சாத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வேன், நாலாட்டின் புத்தூர் பகுதியிலிருந்து பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை கருப்பசாமி இயக்கியபோது, அவருடன் உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10-ஆம் வகுப்பு, 2-ஆம் வகுப்பு மாணவிகள் இருந்தனர்.
மதுரை–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லூரி அருகே சென்றபோது, நெல்லையிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக வேன் மீது மோதியது. மோதலின் தாக்கத்தில் வேனும் காரும் முன்பகுதியில் நொறுங்கின.
சம்பவ இடத்திலேயே காரில் இருந்த வள்ளியூரை சேர்ந்த ஷேக் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அகஸ்டின், வேன் ஓட்டுநர் கருப்பசாமி, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் இரண்டு மாணவிகள் ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். வாகனங்கள் நொறுங்கியதால் கருப்பசாமி மற்றும் அகஸ்டின் இருவரும் சிக்கி தவித்தனர்.
தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, இருவரையும் மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த ஷேக்கின் உடல் கூராய்வுக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தால் மதுரை–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவில்பட்டி மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       kovipatti school bus accident