கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன்!
Kilimanjaro tamilnadu Young Reacher
தான்சானியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம், ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிக உயரமான தனி மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) உயரமுள்ள இந்த எரிமலை வகைத் தனிமலையின் உச்சியைக் (முகடு) 'உகுரு' என்று அழைக்கின்றனர். கிளிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகளைக் கொண்ட கிளிமஞ்சாரோ, உலகின் தனி மலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகிறது.
இதன் அழகுக்காக பல திரைப்படக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. எனினும், உயரம் மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக மூச்சுத் திணறல், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால், இதை அடைவது மிகவும் சவாலானது. மச்சாமே போன்ற சிறந்த வழிகள் இருந்தாலும், நல்ல உடல் தகுதியுடன் உரிய தகவல்களுடன் செல்வது அவசியம்.
இந்தச் சவாலான மலையேற்றத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உட்பட 10 பேர் சாதனை படைத்துள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ் செல்வியின் தலைமையில் இந்தக் குழு, கிளிமஞ்சாரோ சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தது.
இதில், விருதுநகர் மாவட்டம், பி.புதுப்பட்டியைச் சேர்ந்த சிவ விஷ்ணு (5 வயது), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7), இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12) உட்பட பத்து பேர் அடங்குவர். உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற பெருமையைச் சிவவிஷ்ணு பெற்றுள்ளார். மேலும், வரலாற்றில் முதன்முறையாகத் தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து பேர் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்தச் சிகரம் ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kilimanjaro tamilnadu Young Reacher