ஓவர் பில்டப்போடு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட்!
List of top 10 Tamil films that were released with an overbuild and then became flops
2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வெற்றியை விட தோல்விகளே அதிகமாகியுள்ளன.இந்த ஆண்டில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. மேலும், எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களில் குறைந்தது 50 படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 2025ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக படங்கள் வெளியான ஆண்டாகப் பதிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், அதிகமான தோல்விப் படங்கள் வெளியான ஆண்டு என்கிற மோசமான சாதனையையும் கோலிவுட் நோக்கி நகர்கிறது.
சினிமா வட்டாரங்களின் கணக்குப்படி, இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வெறும் 12 திரைப்படங்களே லாபம் ஈட்டியுள்ளன. அதாவது, மொத்த படங்களில் 5 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 95 சதவீத படங்கள் திரையரங்குகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக வெளியான பாலா இயக்கிய “வணங்கான்”, விஷ்ணு வர்தன் இயக்கிய “நேசிப்பாயா”, மற்றும் ஜெயம் ரவி நடித்த “காதலிக்க நேரமில்லை” ஆகிய திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸில் கடுமையாக தோல்வியடைந்தன. குறிப்பாக, “நேசிப்பாயா” படத்தின் புரமோஷனில் நயன்தாரா பங்கேற்றதால் ஹைப் அதிகரித்திருந்தது. ஆனால் படம் வெளியாகி ஒரு வாரத்துக்குள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.
ஜனவரி மாதம் பெரிய நட்சத்திர படங்கள் வெளியாகாத நிலையில், பிப்ரவரி மாதம் வெளியான அஜித் நடித்த “விடாமுயற்சி” படத்தை திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், அந்த படம் முதல் வாரத்திலேயே வாஷ் அவுட் ஆகி, சுமார் 100 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே மாதம் வெளியான தனுஷ் இயக்கிய “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்தது.
ஜி.வி. பிரகாஷின் 25வது படமாக உருவான “கிங்ஸ்டன்” திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், அதிக விஎஃப் எக்ஸ் காட்சிகளுடன் வெளியானது. ஆனால் சலிப்பூட்டும் திரைக்கதையால், படம் முழுமையான தோல்வியடைந்தது.
ஏப்ரல் மாதம் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த “டிடி ரிட்டன்ஸ்” வெளியானது. இது “டிடி” படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
2025ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று கமல்ஹாசன் நடித்த “தக் லைஃப்” ஆகும். மணிரத்னம் இயக்கத்தில், கமலுடன் சிம்பு இணைந்திருந்த இந்த படம், ஏ.ஆர். ரகுமான் இசையுடன் ஜூன் மாதம் வெளியானது. ஆனால் சீரற்ற திரைக்கதையால், படம் முதல் நாளிலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்து, ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 100 கோடியை கூட வசூலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது.
அதே மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான “குபேரா” திரைப்படம் ஆந்திராவில் வெற்றியைப் பெற்றாலும், தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் கடுமையாக தோல்வியடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெளியீட்டு உரிமம் வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இதேபோல், ரசிகர்களிடம் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய கவின் நடித்த “கிஸ்” திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திரைக்கு வந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
மொத்தத்தில், 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு தோல்விப் படங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். வெற்றி பெற்ற சில படங்களைத் தவிர, பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
List of top 10 Tamil films that were released with an overbuild and then became flops