கரூர் கூட்ட நெரிசல்:உளவுத்துறை தோல்வி.. “அறியாமையா? சுயநலமா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா?” – பொன் வில்சன் கேள்வி
Karur stampede Intelligence failure Ignorance Selfishness Police laxity Conspiracy Pon Wilson questions
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டம், உயிர்கொல்லி துயரச் சம்பவமாக மாறி 10 குழந்தைகள் உள்பட 40 உயிர்களை காவு கொண்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள், இந்தச் சம்பவத்திற்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே உயிரிழப்புக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றன.இந்நிலையில், அரசியல் விமர்சகர் பொன் வில்சன், அளித்த பிரத்யேக பேட்டியில், கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் பேசியதில்,“தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு இதுவரை ஏற்பட்டதே இல்லை. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு காரணம் யார்? அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? அல்லது சதியா? – எல்லா கோணங்களிலும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் போலத் தெரிகிறது.
தவெக ஒரு புதிய கட்சி; அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சி அனுபவம் வாய்ந்தது. காவல்துறை அனுபவமிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது.
ஏற்கனவே திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் பகுதிகளில் தவெக கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பார்த்துவிட்டோம்.
அங்கே எவ்வளவு மக்கள் வருகிறார்கள், எந்த வயது பிரிவினர் அதிகமாக வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் வருகிறார்களா, அடிப்படை தேவைகள் இருக்கிறதா – எல்லா தகவலும் உளவுத்துறைக்கு தெரிந்திருந்திருக்கும்.
அந்த அனுபவத்தை வைத்து பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்க வேண்டியது. எவ்வளவு கூட்டம் வரும் என்பதை கணித்து ஏற்பாடுகள் செய்ய வேண்டியது காவல்துறை பொறுப்பு.
அப்படி செய்யாமல் விட்டதால் உளவுத்துறை தோல்வியடைந்ததா?”எனக் கேள்வி எழுப்பினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் உண்மையான காரணங்களை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமா என்பது குறித்து மாநிலம் முழுவதும் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
English Summary
Karur stampede Intelligence failure Ignorance Selfishness Police laxity Conspiracy Pon Wilson questions