திமுக, அதிமுக முதலாளித்துவ கட்சிகளை, நாதக, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வெல்லமுடியாது -
thirumurugan gandhi tvk karur dmk admk ntk seeman vijay
மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி விடுத்துள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினாவில் குழுமினர். மதுரை-திருச்சி-கோவை என லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரளாத நகரங்கள் இல்லை. இங்கெல்லாம் நெருக்கடியோ, நெரிசல் சிக்கலோ நடிகர்கள் வந்த போதும் உருவாகவில்லை. இங்கே மக்களை ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறை இல்லை, கட்சி பொறுப்பாளர்களென எவரும் இல்லை. ஆயினும் ஒழுங்கு நேர்த்தி இருந்தன.
அரசியல் கோரிக்கைக்காக லட்சிய உறுதியுடன் மக்கள் திரளும் பெருங்கூட்டங்கள் அரசியல் மாற்றங்களை கொண்டு வருகின்றன. அன்றும் அரசியல் பேசினோம், ஆண்-பெண்-குழந்தைகள் என ஒன்றுகூடினோம். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், கலைஞர்கள் குழுமினார்கள். சாமானியருக்கான மரியாதையே அவர்களுக்கும் இருந்தது. மக்கள் நடிகர்கள் பின்னால் ஓடவில்லை, அவர்களை பொருட்படுத்தவுமில்லை. நானும், நடிகர் சிம்புவும், ராகவா லாரன்சும், இயக்குனர்கள் ராம், கார்த்திசுப்புராஜ் என ஒன்றாக மக்களிடத்தில் உரையாற்றியபோது லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட முண்டியடித்து முன்னே வரவில்லை.
கொள்கை-கோரிக்கைகாக அணிதிரளும் பொழுதில், இதே சாமானிய மக்கள் இராணுவ ஒழுங்குடன், நெருக்கி துன்புறுத்தாத வகையில் திரள்கிறார்கள். திருட்டு, பாலியல் சீண்டல்கள், நசுக்குதல் என எவையுமில்லை. இதுபோல கிட்டதட்ட 7 நாட்களாக மக்கள் தம்மை ஒழுங்குபடுத்தினர். காவல்துறை, தலைவன் தேவைப்படவில்லை.
அரசியல்நெறி இல்லாமல், ரசிகத்தன்மையை முதன்மையாக்கும் பொழுது, அணிதிரட்சியில்லாமல் கும்பலாக சகமனிதர் மீதான அக்கறையில்லாமல் இதே சாமானியர்கள் திரள்கிறார்கள். அரசியலாக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல், event managers கொண்டு நடத்தப்படும் வணிக கச்சேரிகளாக மக்கள் சந்திப்புகள் நடக்கின்றன. ரசிகர் மனநிலையை வளர்த்த, சிறு-சிறு அசைவையும் ஹீரோயிசமாக ஊடகம் காட்சிப்படுத்தி வர்ணிக்கிறது.
ஆனால், ஜல்லிக்கட்டில் நாம் உரை நிகழ்த்தியபோது, இதே ஊடகங்கள் 'தீவிரவாதிகள் ஊடுறுவல்' என செய்தியாக்கினார்கள். இன்று விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் சினிமாத்தனமான செய்திகளாக்குகிறார்கள். வளர்த்தப்படுவது அரசியல் அல்ல, ரசிகத்தன்மையும், ஹீரோயிசமும். இதை கவனமாக செய்கிறார்கள்.
கரூர் துயரத்திற்கு யார் காரணமெனும் விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுதல் அவசியம். தவெக கட்சி பொறுப்பாளர்களின் அனுபவமின்மை-பொறுப்பின்மையா, அல்லது திமுக அரசின் அலட்சியபோக்கா என்பதெல்லாம் கள ஆய்வுகளாக, முறையான விசாரணை மூலம் உண்மை வெளியாகட்டும்.
தவெக கட்சியினருக்கு, திமுக அரசை எதிர்க்க பலவழிகள் உண்டு, திமுக தவறுகளை எதிர்கொள்ள போராட்ட வழி உண்டு. அதன்வழி, கட்சியை அரசியலாக வலுபடுத்தி அரசியலாக்கப்பட்ட 2ம்கட்ட தலைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், மாநிலம் தழுவி அரசியல்பயிற்சிகள் அளிக்கப்படாமல் திமுகவை எப்படி எதிர்கொள்வார்கள்? அரசியலாக தொண்டரை வளர்க்காமல் எவ்வகையில் திமுக-அதிமுக-பாஜக போன்ற கட்சிகளை வீழ்த்துவார்கள்? கொள்கை-அரசியல் பயிற்சி, மக்கள் திரளை அரசியல் நெறிப்படுத்தி வளர்க்காமல் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளை வெல்ல இயலாது என்பது அடிப்படை அரசியல். பிறகு ஏன் ரசிக-ஹீரோயிச வகை அரசியல் வளர்த்தப்படுகிறது?
கொள்கை தெளிவில்லாமல் ரசிக-ஹீரோயிச மனப்பாங்குடன் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தால், ஜல்லிக்கட்டு போன்ற அரசியல் உணர்வு மிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சியை தமிழர்களால் உருவாக்க இயலாது. 2009ல் நடந்த இனஅழிப்பால் உந்தப்பட்டவர்கள், அரசியல் உணர்வு பெறாமல், ஹீரோயிசம், கும்பல் மனப்பான்மையோடு சீமானால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஈழ போராட்டத்தினை-இந்திய அரசின் சூழ்ச்சிகளை பற்றி எவ்விதமான அரசியல் கல்வியை அளிக்காமல், போலியாக, மேலோட்டமாக, கடமையுணர்வில்லாமல் சினிமா-ஹீரோயிச கதைகளை கொண்டு கட்சியை வளர்த்தார்கள்.
ஈழ அரசியல் உண்டாக்கிய தமிழ்த்தேசிய எழுச்சி ஒரு சினிமா-வசன-கதாசிரியனால் முடக்கப்பட்டது. 16 ஆண்டாக இவ்வெழுச்சியை அடக்கி சிதைத்த பின், அடுத்த போலி அலையை உருவாக்குகிறார்கள்.
பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, நாதக, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வெல்லமுடியாது.
புரட்சி நிகழவேண்டுமெனில், மக்களை அணிதிரட்டும் இயக்கங்களே அதை சாத்தியப்படுத்தும். மக்கள் இயக்கங்களே, நிரந்தர மாற்றங்களை கொண்டுவரும். ஜல்லிக்கட்டு எழுச்சி பாஜகவை படுகுழிக்குள் தள்ளியது, அதிமுகவை அன்னியப்படுத்தியது. இதை சாதித்தவர்கள் அரசியல் உணர்வு கொண்ட சாமானிய தமிழர்கள்.
சாமானிய அன்பிற்கினிய தமிழர்களே! நமக்கென போராட்ட பாரம்பரியம் உண்டு. நமக்கென புரட்சிகர உணர்வுண்டு. அதை எந்த தலைவனிடத்திலும் தேடாதீர்கள். கட்சி அரசியலை கடந்து வாருங்கள். இழப்பை தவிர்ப்போம், இழந்ததை மீட்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thirumurugan gandhi tvk karur dmk admk ntk seeman vijay