கோடிகளில் நஷ்டத்தைத் தவிர்க்க அதிரடி முடிவா...? ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை அதிரடியாக முடக்கிய தமிழக அரசு...!
Is there drastic decision avoid losses crores Tamil Nadu government abruptly frozen 20 thousand crore project
தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் நுகர்வு விவரங்களை மின் வாரிய பணியாளர்கள் நேரடியாகச் சென்று பதிவு செய்து வருகின்றனர். எனினும், சில இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளாமல் தோராயமான கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, மின் நுகர்வோர் கூடுதல் கட்டணச் சுமையை எதிர்கொள்ளும் நிலை உருவாகி வந்தது.
தானியங்கி மின் கணக்கீட்டு திட்டம்
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுடன் செயல்படும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை மின் வாரியம் அறிமுகப்படுத்தியது.

இந்த அமைப்பின் மூலம், மின் பயன்பாட்டு விவரங்கள் தானாக பதிவு செய்யப்பட்டு, கட்டணத் தகவல்கள் நேரடியாக நுகர்வோரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும் வகையில் திட்டமிடப்பட்டது.இதற்காக மாநிலம் முழுவதும் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவி, அவற்றை 93 மாதங்கள் பராமரிக்கும் பணிக்காக கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.
இந்த நடைமுறையில் சுமார் 50 நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றன. தொழில்நுட்ப தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, விலைப்புள்ளிகளை திறப்பதற்கான அரசின் இறுதி ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்த சூழலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததையடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஒப்பந்தப்புள்ளிகள் திரும்பப் பெறல்
புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மின் வாரியத்தின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு குறித்த புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தப்புள்ளிகள் அதிரடி நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, புதிய அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், அரசின் நிதிச் செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக உருவான கடுமையான நிதிச்சுமையை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாக கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Is there drastic decision avoid losses crores Tamil Nadu government abruptly frozen 20 thousand crore project