மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணி..அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
Installation of iron supports on the bridge Minister E V Velu inspects
சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டும் பணியைத் துவக்கி, தற்போது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பணிகள் தொடங்கியது.
3.20 கி.மீ. நீளமுடைய இந்த மேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், மேம்பாலக் கட்டுமானத்தில் இரும்பு குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணி நேற்று, நள்ளிரவில் தொடங்கியது.
ஒரு பாலக்கண்ணில் மொத்தம் 110 டன் எடையுள்ள இரும்பு கட்டமைப்பு அமைக்கப்படும். இவ்வளவு பருமனான இரும்பு உத்திரங்களை தூக்குவதற்காக 150 டன் கொள்ளளவு கொண்ட உயர்திறன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நள்ளிரவில் பணித்தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நிறைவு பெற்றவுடன் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நேரடி ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் உடனிருந்தனர்.
English Summary
Installation of iron supports on the bridge Minister E V Velu inspects