வங்கதேசத்தில் பெரும் தீ விபத்து! 9 தொழிலாளர்கள் பலி!
Bangladesh fire accident
வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் இன்று காலை பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் அமைந்திருந்த ஒரு ரசாயனக் கிடங்கும் அதனுடன் இணைந்திருந்த ஆடைத் தொழிற்சாலையும் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
தீ பற்றிய தகவல் கிடைத்ததும், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ மிக வேகமாக பரவியதால் தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் புகையால் மூடப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பேரழிவில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் 3 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடக்க விசாரணையில், அருகிலிருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நச்சுப் புகையை சுவாசித்ததே பலரின் உயிரிழப்புக்கு காரணமானிருக்கலாம் என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணியாளர்கள் தற்போது தீயில் சிக்கியிருந்த பொருட்களை அகற்றி, பாதிப்பு அளவை மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் டாக்கா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.