கரூர் ரெய்டில் அதிரடி திருப்பம்.. விரியும் விசாரணை வளையம்.!! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!! - Seithipunal
Seithipunal


கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறை சோதனை வேகமெடுத்துள்ளது. கடந்த 5 நாட்களாக அரசு ஒப்பந்ததாரர் ஒருவரின் கணக்காளரிடம் விசாரணை நடத்திய வருமானவரித் துறையினர் அவரை தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று ஒப்பந்ததாரரின் மற்றொரு அலுவலகத்தில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி முதல் வருமானவரித் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முற்பட்ட போது அங்கு திரண்ட திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்ததோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சோதனையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக பால விநாயாகா குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் இல்லம், கணேஷ் முருகன் குவாரி - நிதி நிறுவனம், தனியார் பேருந்து சேவையின் உரிமையாளர் குணசேகரன், ராமவிலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும்  கொங்கு மெஸ், சக்தி மெஸ், சுரேந்தர் மெஸ் போன்ற சில இடங்களிலும் சோதனை நடத்தியதில் பெயரளவுக்கு மெஸ் நடத்தப்பட்டு உள்ளே நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது அம்பலமானது. அதேபோல் செந்தில் பாலாஜியின் நண்பரும் ஒப்பந்ததாரருமான சங்கரின் அலுவலகம், அங்கு பணிபுரியும் பெண் கணக்கர் ஷோபனா, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், திமுக பிரமுகர் குமார், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதேபோல் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக் மனைவி பெயரில் கரூர் பைபாஸில் கட்டி வரும் புதிய பங்களா மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நேற்று மாலை செந்தில் பாலாஜியின் நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் அலுவலகத்தில் கணக்கராக பணிபுரியும் ஷோபனா என்பவரை, அவரது வீட்டிலிருந்து காரில் அழைத்துச் சென்ற அதிகாரிகள், சங்கரின் மற்றொரு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனையின் வளையம் விரிவடைந்து இருப்பதால் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax raid expanded in SenthilBalaji related areas


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->