வேவு பார்த்தல் என்பது பாதுகாவல் படையினரின் முக்கியப் பணி. அதற்கென அவர்கள் ஒரு பிரிவை வைத்திருப்பார்கள். அப்பிரிவினருக்கு அந்தப் பயிற்சி அளிக்கப்படும் போது, ஒரு மோப்ப நாய்க்கு இணையாக அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். வீரமும் விவேகமும் இணைந்து அவர்கள் பணியாற்ற வேண்டும்.
அவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள். அவர்களின் பணி அலுவலின் நியமப்படி, அவர்கள் யாரையும், எளிதில் நம்பி விடக் கூடாது.
யாரையும் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டும். மெய்க்காவலர் என்பதன் உண்மையான பணி இது. அந்தக் காலத்திலிருந்தே, எல்லா மன்னர்களும் இதற்கென மெய்க்காப்பாளர் படைத் தளபதியும் இருப்பார்.
நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரரான பூலித்தேவனின் மெய்க்காவல் படைத் தளபதியாக இருந்தவன் வெண்ணிக்காலாடி.

பெரிய காலாடி என்றும் இவனுக்கு மற்றொரு பெயர் உண்டு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன்.
கான்சாகிப் என்ற மருதநாயகம் அடிக்கடி தங்கள் பாளையத்தின் மீது போர் தொடுத்துக் கொண்டிருந்ததால், மருதநாயகத்தின் படைகளைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பில் இருந்தான் வெண்ணிக் காலாடி.
1760-ஆம் ஆண்டு, டிசம்பர் 12-ஆம் தேதி, மருதநாயகம் யாருக்கும் தெரியாமல் அதிரடித் தாக்குதல் நடத்துவதற்காக, வாசுதேவநல்லுரில் இருந்த அடர்ந்த காட்டுக்குள், தன் படையினருடன் முகாமிட்டிருந்தான்.
இதனை அறிந்த ஒற்றர்கள், தங்களது தளபதி, வெண்ணிக்காலாடியிடம் இந்தச் செய்தியைக் கூறினார்கள்.
அவன் இது பற்றி பூலித்தேவனுக்குத் தகவல் சொன்னான். அந்தப் படையை வாசுதேவநல்லூர் கோட்டையை நெருங்க விடாதபடி பார்த்துக் கொண்டு,
எதிரிகளை வென்று வருவதாக உறுதிபடக் கூறி விட்டுச் சென்றான். பூலித்தேவன், அவனுக்குத் துணையாக, நூற்றுக் கணக்கான படை வீரர்களை தகுந்த ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தான்.
மருதநாயகத்தின் படைகள் டிசம்பர் 12-ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து ஒரு வாரம், வாசுதேவநல்லூர் கோட்டையை முற்றுகை இடுவதற்காக, கொஞ்சம் கொஞ்சமாக மருதநாயகத்தின் வீரர்கள்,
.jpg)
அந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள புதர்களில் மறைந்திருந்தனர். வெண்ணிக்காலாடி தனது படைகளில் வில் வித்தைக்காரர்களை மட்டும் அழைத்துக் கொண்டான். வாசுதேவநல்லூர் கோட்டையில் உள்ள கரு மருந்துடன், வேர்எரி என்ற மூலிகையின் சாற்றைக் கலந்தான்.
இந்த வேர்எரி மூலிகை என்பது, பச்சையாக இருக்கும் மரத்தின் வேர்ப்பகுதியில் சிறய துளையிட்டு, இதன் சாற்றை ஊற்றினால், அந்த மரத்தின் வேர் கூட தீப்பற்றி எரியும்.
இந்த மூலிகைச் சாற்றை வெடி மருந்துப் பொருட்களில் கலந்து, அதனை அம்பின் முனையில் பொருத்தி, கோட்டையின் மேலிருந்து, கோட்டையைச் சுற்றியுள்ள புதர்களில் மறைந்திருக்கும், மருதநாயகத்தின் வீரர்களை நோக்கி அம்பெய்தனர்.
அந்த வெடிமருந்தும், மூலிகையும் கலந்த வீரியத்தின் வேகத்தில் புதரில் உள்ள மரங்கள் எல்லாம் வெடித்து, வீரர்கள் தூக்கி எறியப்பட்டனர். போரில் பூலித்தேவனும், வியூகம் வைத்து, எதிரிகளை நேருக்கு நேர் நின்று போராடினான். புலியின் வேகத்தில் எதிரிகள் வரிசையாக மாண்டனர்.
அப்படியும், சில வீரர்கள் மறைந்திருந்து கோட்டைக்குள் புகுந்தனர். அவர்கள் எல்லோரையும் வெண்ணிக்காலாடி வெட்டிச் சாய்த்தான். அவனது வீரர்களும், எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து விட முடியாதபடி போர் புரிந்து கொண்டிருந்தார்கள்.

கோட்டைச் சுவரில் ஒளிந்திருந்த ஒருவன், யாரும் எதிர்பாராத வண்ணம், தனது கூர்மையான வாளை வெண்ணிக்காலடியின் வயிற்றில் பாய்ச்சினான்.
இதனால், வெண்ணிக்காலாடி நிலை தடுமாறினான். ஆவன் வயிற்றிலிருந்து குருதி கொட்டியது. கூடவே, அவன் வயிற்றில் இருந்த குடலும் வெளியே சரிந்தது.
வெண்ணிக்காலாடி அந்தக் குடலை வயிற்றுக்குள் தள்ளி விட்டு, தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை விரித்து, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு, மீண்டும், எதிரிகளுடன் ஆக்ரோசமாகப் போர் புரிந்தான். தன் மரணத்தைப் பற்றி அவனுக்குத் தெரிந்து விட்டது.
அதற்குள் தன்னால் முடிந்த அளவு, எதிரிகளைக் கொன்று விடுவோம் என்றெண்ணி, கண்ணில் பட்ட மருதநாயகத்தின் வீரர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தான்.
அவனது கொலை வெறித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் எதிரிப்படையினர் தப்பித்து ஓடினர். டிசம்பர் 20-ஆம் தேதி நடந்த இந்தப் போரில் மருதநாயகம் தோல்வி அடைந்து தப்பித்து ஓடி விட்டான்.
பூலித்தேவன், வெண்ணிக்காலாடியை நோக்கி ஓடி வந்தான். அவனை இறுகக் கட்டிக் கொண்டான். தனது இறுதிச் சொட்டு ரத்தத்தை, பூலித்தேவனின் மடியில் விட்டு வீர மரணம் அடைந்தான் வெண்ணிக்காலாடி.
அவனுடைய தியாகத்தைப் போற்றி, பூலித்தேவன், வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் அமைத்தான். அவனுடைய குடுமபத்திற்கு ஏராளனமான பொன்னும் பொருளையும் மன்னன் வாரி வழங்கினான். வெண்ணிக்காலாடி போரிட்ட இடம் இப்போதும் காலாடி மேடு என்றழைக்கப்படுகிறது.
இன்றும் அந்த ஊரில் அவனைப் பற்றி நாட்டுப்புறப் பாடல் ஒன்றையும் பாடுகின்றனர்.
“செத்தும் சாகாதவன் போலவே – வெண்ணி
சிங்காரமாய் தானிருந்தான் சுத்தவீரன்”