அண்ணாமலையார் கோவில் பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா.. இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம்..!!
Hindu leaders protest against Mother Teresa photo
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் வரும் வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பல்வேறு நன்கொடைகளையும் காணிக்கைகளையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையை தலைமை இடமாக கொண்ட மேத்யூ செராமிக்ஸ் என்ற நிறுவனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழங்கப்படும் விபூதி பிரசாத வழங்கும் பாக்கெட் நன்கொடையாக வழங்கி உள்ளது.

அந்த பாக்கெட்டின் முன் பகுதியில் அருணாச்சலேஸ்வரர் புகைப்படம் பின்புறத்தில் அந்த நிறுவனத்தின் முகவரியோடு அன்னை தெரேசாவின் படமும் இடம்பெற்று இருந்தது. இது குறித்தான புகைப்படம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜகவினர் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் வழங்கப்பட்ட விபூதி பிரசாத பாக்கெட்டில் இடம் பெற்றிருக்கும் அன்னை தெரேசா படத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவிலுக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கோவில் அறங்காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Hindu leaders protest against Mother Teresa photo