அழகப்பா பல்கலைக்கழக 41-ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா!
Happy 41st Founding Day of Alagappa University
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 41-ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக அலுவலர்கள் நாள் விழா பல்கலைக்கழக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமையுரை ஆற்றிய மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் ரவி பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அழகப்பா பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகளில் முதன்மையான பல்கலைக்கழகமாகத் திகழ்வதற்கு இதற்கு முன் வழி நடத்திய துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகிய அனைவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே காரணமாகும் என்றார்.
தேசியத் தர நிர்ணயக் குழுவின் நான்காம் சுற்று தரமதிப்பீட்டில் இருமை முறை (Dual Mode) வகையில் நான்கிற்கு 3.59 புள்ளிகளுடன் A++ தகுதி பெற்று தமிழ்நாட்டில் முதல் பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகம் விளங்குகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தை மேலும் மேலும் சிறந்த பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்கு அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார்.
இவ்விழாவில் முன்னாள் பதிவாளர் முனைவர் இரெ. தண்டபாணி அழகப்பா பல்கலைக்கழகம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பேரா. வெ.பழனிச்சாமி, சி.சேகர் மற்றும் சு.ராசாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகப் பணியாளர்கள் சார்பில் உதவி தொழில்நுட்ப அதிகாரி ஜெ.கருணாநிதி, உதவிப் பதிவாளர் ம.முருகேசன் ஆகியோர் உரையாற்றினர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் 25-ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஷியாம் சுந்தர், ஆய்வக உதவியாளர் (தே.நி.) , துணைவேந்தர் பொன்னாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2000/- க்கான காசோலையை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கு துணைவேந்தர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிதி அலுவலர் செல்வி, காரைக்குடி வணிகர் சங்க தலைவர் சாமி திராவிடமணி, கனரா வங்கி முன்னாள் பணியாளர் மைக்கேல், பாரி முடியரசன், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் திருமலைச்சாமி. தொலைதூரக்கல்வி இயக்குநர் முனைவர் ஏ.கண்ணபிரான் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக அலுவலர்கள் தோட்டத்தில் துணைவேந்தர், தலைமை விருந்தினர், பல்கலைக்கழக அதிகாரிகள், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.செந்தில்ராஜன் வரவேற்புரையாற்றினார். தேர்வாணையர் முனைவர் எம்.ஜோதிபாசு நன்றி கூறினார். அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொளி இயக்குநர் முனைவர் சுமதி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
English Summary
Happy 41st Founding Day of Alagappa University