சிறுபான்மை கைதி விடுதலை : மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி கே வாசன்.! - Seithipunal
Seithipunal


நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறுபான்மை கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிக்கை வெளியிடுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசு கடந்த தேர்தலுக்கு முன்பாக அறிவித்த வாக்குறுதிகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீண்ட காலமாக ஆயுள் தண்டனை முடிந்தும் சிறையில் வாடுவோரை விடுதலை செய்வோம் என்று கூறிய வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட சிறுபான்மை முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்து தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தினார்கள்.

ஆனால் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாள் செப்டம்பர் 15 ஆம் தேதி வருவதை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

இது சம்பந்தமாக அரசு வெளியிட்ட அரசாணை எண் 488 சிறுபான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையை குறைத்திருக்கிறது. அதாவது மத சாதிக்கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும்.

சிறையில் வாடும் சிறுபான்மை முஸ்லிம்களின் குடும்பங்கள் நிர்கதியாக தந்தையின்றி மகளும், கணவனின்றி மனைவியும், பெற்ற மகன் விடுதலையாகி கடைசி காலத்தில் தன்னைக் காப்பாற்றுவான் என்ற கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு, இந்தப் பிரச்சனையை மதங்களைக் கடந்து மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.

தமிழக அரசு ஆயுள் கைதிகளை விடுவிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு அரசாணையில் குறிப்பிட்டுள்ள சாதி மதக்கலவரத்தைக் காரணம் காட்டி முஸ்லிம்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.

ஆயுள் தண்டனை முடிந்தும் சிறையில் வாடும் அவர்கள் கண்டிப்பாக திருந்தி இருப்பதோடு வயதானவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவித்ததைப் போல் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்திருக்கும் முஸ்லிம்களை மனிதாபிமான அடிப்படையில்  விடுவிக்க நீதியரசர் ஆதிநாதன் தலைமையிலான குழுவினரும் முழு மனதுடன் ஈடுபட வேண்டுமெனவும், பிறக்கின்ற இந்த புத்தாண்டிலாவது அவர்கள் தங்கள் குடும்பத்துடன் புதுவாழ்வு துவங்க வழி வகுக்க வேண்டுமெனவும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan statement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->