சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை கடலில் கரைப்பு: 16,500 போலீசார் பாதுகாப்பு..!
Ganesha idols installed in Chennai to be immersed in the sea tomorrow
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை மேளத்தாளத்துடன் கடலில் கரைக்கப்பட உள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் எல்லையில் உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 14-ஆம் தேதி 1,562 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கடந்த 05 நாட்களாக பொதுமக்கள் சிலைகளை வழிபாடு செய்தனர். அதைதொடர்ந்து நாளை சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க காவல்துறை வழிகாட்டுதலின்படி இந்து அமைப்புகள் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.
இதனால் சிவசேனா, தனியார் அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட சிலைகளை நாளை கரைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கு நாளை மறுநாள் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் போது, கட்டுப்பாடுகளை மீறி யாரேனும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் தடை செய்யப்பட்ட வழியாக சிலைகள் கொண்டு செல்ல முயன்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் தடுக்கும் வகையில், போலீஸ் ஆணையர் அமல்ராஜ் உத்தரவுப்படி கூடுதல் ஆணையர்கள் நரேந்திரன் நாயர், கபில் குமார் சி.சரத்கர் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் தலைமையில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரம் பேர் நாளை காலை முதல் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சிலைகள் கரைக்க புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதியில் பசுமை தீர்ப்பாயம் சிலைகள் கரைக்க தடை விதித்துள்ளதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் போலீசார் மூலம் இன்றைக்குள் இடம் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளை கரைக்கும் பணியில் நன்கு நீச்சல் தெரிந்த மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேநேரம், கடலில் பொதுமக்கள் யாரும் இறங்காத வகையில் சிலைகள் கரைக்கும் கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் யாரேனும் தவறி அலையில் சிக்கினால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சிலைகள் நாளை காலை 10 மணி முதல் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இருந்து வாகனம் மூலம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
English Summary
Ganesha idols installed in Chennai to be immersed in the sea tomorrow