உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என மிரட்டி பணம் பறிப்பு: கையும் களவுமாக சிக்கிய கணவன்-மனைவி!
food security officials Extortion Husband wife arrested
திருப்பூர், களிமேடு பகுதியில் சிவசாமி என்பவர் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). இவர் மளிகை கடையில் இருந்த போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் காரில் வந்து இறங்கினர்.
அவர்கள் தனலட்சுமி இடம் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என தெரிவித்து உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள், புகையிலை பொருட்கள் போன்றவை பயன்படுத்துகிறீர்களா என கேள்வி எழுப்பினர்.
மேலும் ரூ. 2500 பணம் கேட்டு மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கடையில் இருந்த ரூ. 2500 ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் காரில் ஏறி சென்று விட்டனர். இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளிலும் விசாரித்த போது இதுபோல் மற்ற கடைகளுக்கு யாரும் வரவில்லை என தெரிய வந்தது.
இதனை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனலட்சுமி மற்றும் சிவசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என தெரிவித்து பணம் பறித்துச் சென்றவர்களை தேடி வந்தனர்.

மேலும் அவர்கள் வந்த கார் என்னை வைத்து விசாரணை நடத்திய போது ஏமாற்றியவர்கள் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) இவரது மனைவி சத்தியபிரியா (வயது 23) என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோயம்புத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் கூலி வேலை செய்யும் இவர்கள் இது போன்ற பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் களிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
food security officials Extortion Husband wife arrested