பறக்கும் படையின் பரபரப்பு சோதனை...! ரூ.50 லட்சம் மேல் ரொக்கம், போதைப்பொருள், இலவச பொருட்கள் பறிமுதல்...!
Flying squad conducts sensational raid Over 50 lakh cash drugs free goods seized
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் திடீர் ரெய்ட்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தீவிர கண்காணிப்பின் பலனாக, நேற்று வரை நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கில் மதிப்புடைய பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் தெரிவித்தார்.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.52.69 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும், வாக்காளர்களை கவர்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.7.24 லட்சம் மதிப்பிலான இலவசப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதனுடன், ரூ.2.13 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் ரூ.5.82 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத போதைப்பொருட்களும் அதிகாரிகளின் வலையில் விழுந்தன.
அதேசமயம், பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பேரில் ரூ.45.34 லட்சம் ரொக்கமும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமீறல்களுக்கு இடமளிக்காத வகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Flying squad conducts sensational raid Over 50 lakh cash drugs free goods seized