நுங்கப்பாக்கம் ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி..!
Fathers Appeal Dismissed in Nungambakkam Ramkumar Death Case
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்பவர் அடைக்கபட்டார்.
ஆனால், அவர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கை கோரியது. அதன்படி, ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என ஆணையம் கூறி, இந்த வழக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முடித்து வைத்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், எந்த விசாரணையும் நடத்தாமல், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருப்பினும் தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழக காவல் துறை தரப்பில், இதே விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2024-இல் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் குறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Fathers Appeal Dismissed in Nungambakkam Ramkumar Death Case