சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பைக்குகளுக்கு தடை விதித்த விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா நீதிமன்றம் கண்டனம்..!
Kolkata Court Slams Election Commission Over Ban on Two Wheelers Ahead of Assembly Elections
மேற்கு வங்கத்தில் நேற்று முதல் கட்ட தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதாக கூறி, கொல்கத்தா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் பைக்குகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதாவது, வரும் 27-ஆம் தேதி மாலை 06 மணி முதல் 29-ஆம் தேதி தேர்தல் முடியும் வரை, காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை மட்டுமே பைக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், பைக் பேரணிகளுக்கும், பைக்கின் பின் இருக்கையில் மற்றொருவர் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா ராவ், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான போக்கை கடுமையாக சாடியுள்ளார்.
'தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். சாதாரண மக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? போலீஸ் நிர்வாகம் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் போது இத்தகைய தடை எதற்கு? தைரியம் இருந்தால் அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள். பைக்குகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன், கார்களுக்கும் தடை விதிக்க வேண்டியதுதானே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த 05 ஆண்டுகளில் பைக் ஓட்டுபவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற புள்ளி விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இத்தடை குறித்து 24-ஆம் தேதி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Kolkata Court Slams Election Commission Over Ban on Two Wheelers Ahead of Assembly Elections