கொடூரம்...! கை, கால்களில் ஒயர் சுற்றி பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை...! நடந்தது என்ன...?
father killed his children by wrapping wire around their hands and feet and then committed suicide What happened
தூத்துக்குடி அருகே குடும்பப் பிரிவால் மனவேதனையில் தவித்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது இரு குழந்தைகளின் உயிரைப் பறித்துவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்த அந்தோணிமுத்துவின் மகன் மரிய மைக்கேல் (45), லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

அவரது மனைவி சபிதாரோனிகம். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயிலும் மரிய நிரோஷா (14) என்ற மகளும், ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் மரிய கெனிஸ்டன் (12) என்ற மகனும் இருந்தனர்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மனைவி தனியாக பிரிந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், மரிய மைக்கேல் தனது தந்தை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மனைவியின் பிரிவு காரணமாக அவர் நீண்ட நாட்களாக கடும் மனவேதனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் நடைபெற்ற இரவு, மரிய மைக்கேல் தனது இரு குழந்தைகளுடன் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தார்.
அவரது தந்தை வீட்டின் வெளியே படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் எழுந்த மரிய மைக்கேல், உறக்கத்தில் இருந்த மகள் மற்றும் மகனின் கை, கால்களில் மின்கம்பியை சுற்றி மின்சாரம் பாய்ச்சியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, மரிய மைக்கேல் தனது காலிலும் மின்கம்பியை சுற்றி மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
father killed his children by wrapping wire around their hands and feet and then committed suicide What happened