'உடனே களம் இறங்குங்க'...! - மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் விடுத்த அதிரடி கோரிக்கை...! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதளப் பதிவில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அந்த பதிவில், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க இயலாது என்றும், தமிழக அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், மாநிலங்களின் ஒற்றுமை உணர்வுக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் நீர் வழங்க இயலாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை என்றும், தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கை வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, காவிரி நீரை குடிநீர் மற்றும் பாசனத்திற்கான முதன்மை ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடையிலும், காவிரி படுகை விவசாயிகளிடையிலும் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு கேட்கவில்லை, கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற வகையிலான கருத்துகள், சட்ட விதிகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் அலட்சியப்படுத்தும் போக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி. நீரும் காலதாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என கர்நாடக அரசு வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சியை நிலைநிறுத்தும் அரசியல் சூழ்நிலைக்காக தமிழகத்தின் நீர்வள உரிமைகள் கர்நாடக அரசிடம் விட்டுக்கொடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதலமைச்சரின் நிலைப்பாட்டின்படி, டெல்லியில் உரிய அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நியாயமான தீர்வை பெற்றுத்தர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிடும் கருத்துகள் மட்டும் போதுமானவை அல்ல என்றும், டெல்லி காங்கிரஸ் தலைமையின் மூலம் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தமிழக அரசு வழக்கம்போல் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிக்காமல், சட்ட ரீதியிலான துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவதற்கும், தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் மேகதாது அணைத் திட்டத்தை முழுமையாக கைவிடச் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Take action immediately TTV Dhinakaran urgent request Tamil Nadu government Mekedatu issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->