மருந்துகடைகளில் இனி 'இஷ்டத்துக்கு' வாங்க முடியாது...! ஆல்கஹால் கலந்த சிரப்களுக்கு மத்திய அரசு வைத்த கிடுக்கிப்பிடி...!
You can no longer buy whatever you want pharmacies central government crackdown alcohol based syrups
ஆல்கஹால் அதிக அளவில் கலந்துள்ள இருமல் மருந்துகள் மற்றும் சில திரவ மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பையும் மருந்துகளின் பொறுப்பான பயன்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, 12 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆல்கஹால் கலந்துள்ளதுடன், 30 மில்லிலிட்டருக்கும் அதிக அளவில் உள்ள பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்துகளும் இனி அட்டவணை எச்–1 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை மருந்தகங்களில் இருந்து நேரடியாக வாங்க இயலாது.
அதிக அளவு ஆல்கஹால் கலந்துள்ள சில இருமல் மருந்துகள், உடல்நல ஊக்கத் திரவங்கள் மற்றும் வாய்வழியாக உட்கொள்ளப்படும் பிற மருந்துகள், உரிய மருத்துவ ஆலோசனை இன்றி பயன்படுத்தப்படுவதால் தவறான பயன்பாட்டிற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கிலேயே புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மருந்துகளை அட்டவணை எச்–1 பிரிவில் இணைப்பதன் மூலம், அவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தை முறையாக கண்காணிக்கவும், மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவும், பொறுப்பான மருந்து வழங்கும் நடைமுறையை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேவேளையில், இந்த மாற்றம் சம்பந்தப்பட்ட மருந்துகள் பாதுகாப்பற்றவை அல்லது அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பொருளல்ல என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மருந்துகள் (ஐந்தாவது திருத்தம்) விதிகள்–2026 மூலம் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
மேலும், வீட்டு உபயோக மருந்துப் பட்டியலில் இடம்பெற்று வந்த ‘சிரப்ஸ்’ என்ற சொல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இதுவரை எளிதாக கிடைத்து வந்த பல்வேறு திரவ மருந்துகள், குறிப்பாக இருமல் மருந்துகள் மற்றும் உடல்நல ஊக்கத் திரவங்கள், இனி கடுமையான ஒழுங்குமுறை கண்காணிப்பின் கீழ் விற்பனை செய்யப்படும்.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
You can no longer buy whatever you want pharmacies central government crackdown alcohol based syrups