3 குழந்தைகளின் தாய்க்கு குடும்பக் கட்டுப்பாடு... அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட திடீர் விபரீதம்...! - Seithipunal
Seithipunal


மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இளம்பெண்ணின் வாழ்க்கை, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு திடீரென முடிவுக்கு வந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த சிறிது நேரத்திலேயே உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 23 வயது இளம்பெண் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய உறவினர்கள், உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (27). பொக்லைன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி (23). இந்த தம்பதிக்கு மவுரிசா (4), ஹர்சா (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.இந்த நிலையில் சுமதி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 42 நாட்களுக்கு முன்பு கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு 3-வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.மூன்றாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, இனிமேல் குழந்தைகள் வேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து வாழப்பாடி அருகே உள்ள ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமதிக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சை நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே சுமதியின் உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, மேல்சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுமதியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த தகவல் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமதிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட தவறே அவரது உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மூன்று குழந்தைகளையும் தவிக்கவிட்டு தாய் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து சுமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமதியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் வரை சுமதியின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family planning mother of 3 children sudden tragedy after surgery


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->