ராமேசுவரம் ரெயிலில் போதைப்பொருள் அதிர்ச்சி! - முன்பதிவு இல்லா பெட்டியில் சிக்கிய 10 கிலோ கஞ்சா பை
Drug shock Rameswaram train bag containing 10 kg cannabis seized unreserved compartment
வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் நோக்கி இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தமிழ்நாடு ரெயில்வே காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார், வடமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சந்தேகத்துக்கிடமான ஒரு பை போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.
அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 பொட்டலங்களில் மொத்தம் 10 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனடியாக கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், அவற்றை ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணையை தொடங்கினர்.
இந்த கஞ்சா யாருடையது, யார் கடத்தி வந்தது என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், ரெயில் வழி போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் வேகம் சேர்த்துள்ளது.
English Summary
Drug shock Rameswaram train bag containing 10 kg cannabis seized unreserved compartment