பிஞ்சுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு அதிரடி தண்டனை...! - குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை...!
Dramatic punishment cruelty inflicted child 20 years prison worker who harassed child
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் நதோன் தாலுகாவைச் சேர்ந்த பிரகாஷ் சந்தின் மகன் தேசுராஜ் (வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தில் வசித்து, கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம், 3 வயது பெண் குழந்தையிடம் தேசுராஜ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.அவர்கள் வருவதை அறிந்த தேசுராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டு தேசுராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கில் இருதரப்பு வாதங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக தேசுராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதனுடன், பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தேசுராஜை காவலர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
Dramatic punishment cruelty inflicted child 20 years prison worker who harassed child