பதைபதைக்க வைக்கும் சம்பவம்...! கிணற்றில் விழ முயன்ற பசுவைத் தடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு...!
heartbreaking incident tragic end befell woman who went stop cow from falling well
திருவண்ணாமலை சந்தவாசல் அருகே, கிணற்றை நோக்கி சென்ற மாட்டை தடுத்து காப்பாற்றுவதற்காக பதற்றத்துடன் ஓடிய பெண், எதிர்பாராதவிதமாக அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போளூர் தாலுகா சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்.

கூலித்தொழிலாளியான இவரது மனைவி வேண்டா (40). இவர் நேற்று காலை தங்களது விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது மாடு திடீரென கிணற்றின் அருகே சென்றுள்ளது.
கிணற்றுக்குள் மாடு விழுந்துவிடக்கூடாது என அச்சமடைந்த வேண்டா, அதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவசரமாக ஓடியுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் இடறி, நிலைதடுமாறி அதே கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால், மண் தரையில் வேகமாக விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த வேண்டா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாட்டை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபரீதம் அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சந்தவாசல் காவலர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பின்னர் உயிரிழந்த வேண்டாவின் உடலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
heartbreaking incident tragic end befell woman who went stop cow from falling well