சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ்: ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் - அதிரடி நடவடிக்கையில் காவல்துறை!
Midnight Bike Stunts in Chennai Outraged Residents Block Kodambakkam Road Police Launch Crackdown
சென்னை நகரின் பிரதான சாலைகளில் வார இறுதி நாட்களில் நள்ளிரவில் நடைபெறும் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடம்பாக்கத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள்: நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம் மற்றும் வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு, காதை கிழிக்கும் சத்தத்துடன் அதிவேகமாகப் பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் ஆத்திரம் & மறியல்: கோடம்பாக்கம் பிரதான சாலையில் தொடர்ந்து அதிக சத்தத்தால் தூக்கமிழந்த பகுதி மக்கள், சாலையில் தடுப்புகளை அமைத்துப் பைக் ரேசில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன், நிரந்தரத் தீர்வு கோரி திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்: ரோந்து வந்த காவல்துறையினரை முற்றுகையிட்ட பொதுமக்கள், "ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இது தொடர்கிறது; பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை" என அதிருப்தி தெரிவித்தனர்.
எதிர் திசையில் தப்பிக்கும் ஆபத்து: காவல்துறையினரின் வாகனச் சோதனையைக் கண்டதும் இளைஞர்கள் வாகனங்களை எதிர்திசையில் திருப்புகின்றனர். இதனால் சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
காவல்துறை நடவடிக்கை: சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அதிகாரிகள், பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், பைக் ரேசில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
English Summary
Midnight Bike Stunts in Chennai Outraged Residents Block Kodambakkam Road Police Launch Crackdown