மாநில உரிமைக்காகக் கைகோர்த்த கட்சிகள்...! தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை தி.மு.க. வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று நான்காவது நாளாக 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்வைத்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், மக்களவையில் தற்போது உள்ள 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை நிரந்தரமாக தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையே மக்களவை தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்படும் தற்போதைய விகிதம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த தனித்தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன் பேசும்போது, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா இன்னும் இறுதி முடிவுக்கு வராத நிலையில், அதன் அடிப்படையில் தமிழக அரசு அவசரமாக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தார்.

பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டுவருமா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், உறுதியற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் கொண்டுவருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.மேலும், இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேசமயம், பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்கு பா.ம.க. ஒருபோதும் எதிராக இருக்காது என்றும் தெரிவித்தார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அரசியல் நோக்கத்துடன் தமிழக அரசு அவசரமாக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அதேவேளையில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தங்களது ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார்.சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தி.மு.க. ஆரம்பம் முதலே உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2024-ம் ஆண்டிலேயே தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் அபாயத்தை எடுத்துரைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் தென் மாநிலங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தி.மு.க. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், மசோதாவின் பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் சென்றதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பின் விளைவாகவே அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க. எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஆதரவு தெரிவித்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையுடன் தொகுதி மறுவரையறையை இணைத்து, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசினர் தனித்தீர்மானத்தை தி.மு.க. வரவேற்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் அரசு முன்வைத்துள்ள இரண்டு தனித்தீர்மானங்களுக்கும் தி.மு.க. முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parties join hands statehood DMK MLAs raise slogans support resolution


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->