பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு!
Legal Challenge Filed in NGT Against Proposed Secretariat at Pattinapakkam
சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிராக, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திட்டத்தின் பின்னணியும் எதிர்ப்பும்:
முன்னதாக, 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாகப் பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இருப்பினும், இத்திட்டத்திற்குப் பட்டினப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள 9 கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தவெக கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர்த்த பிற தோழமைக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கம் தொடர்பான அரசாணையை அரசு ரத்து செய்துவிட்டு மாற்று இடத்தை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகினாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு:
இந்நிலையில்தான், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இத்திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், "முறையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்தை மேற்கொள்வது மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் (EIA) அறிவிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தற்போது பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Legal Challenge Filed in NGT Against Proposed Secretariat at Pattinapakkam