ரூ.61.73 லட்சத்தை பறிகொடுத்து நின்ற வாலிபர்! வெளிநாட்டு வேலை மோசடி கும்பலின் அதிர்ச்சி பின்னணி என்ன...?
young man lost 61point73 lakh What shocking background foreign job scam gang
ஜெர்மனியில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பல்வேறு கட்டங்களாக ரூ.61.73 லட்சம் வசூலித்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (28). இவரை கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைப்பேசி மூலம் தொடர்புகொண்ட 2 பேர், ஜெர்மனியில் நல்ல வேலை மற்றும் அதிக வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய கணேஷ், வேலைக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக கருதி அவர்கள் கேட்ட தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.பதிவு கட்டணம், காப்பீடு, விசா ஏற்பாடு, மருத்துவப் பரிசோதனை, பணம் வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கணேஷிடம் தொடர்ந்து பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை நம்பி கணேஷ் மொத்தம் ரூ.61 லட்சத்து 73 ஆயிரத்து 461 தொகையை அவர்களிடம் செலுத்தியுள்ளார்.ஆனால், பணம் முழுவதும் பெற்றுக்கொண்ட பிறகும் கணேஷை ஜெர்மனிக்கு அனுப்புவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அந்த நபர்கள் மேற்கொள்ளவில்லை.
மேலும், தான் செலுத்திய பணத்தையும் திருப்பி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததுடன், பணமும் திரும்ப கிடைக்காததால் சந்தேகமடைந்த கணேஷ், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கணேஷிடம் பணம் பெற்றவர்கள் யார், அவர்களின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா, பணம் எந்தெந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
young man lost 61point73 lakh What shocking background foreign job scam gang