ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படம் குறித்த சூப்பர் அப்டேட்.. ரிலீஸ் எப்போ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
A super update on the film Sigma directed by Jason Sanjay When is the release Fans are eagerly waiting
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
‘சிக்மா’ படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது 2வது பாடலாக ‘அய்யோ அம்மாடி’ வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெலோடி பாடலாக உருவாகியுள்ள ‘அய்யோ அம்மாடி’ பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய் - சமந்தா நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் சில பாடல் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த பாடலின் காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் பாடலில் சந்தீப் கிஷனுடன் ஜேசன் சஞ்சய்யும் இணைந்து நடனமாடியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், “இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் விரைவில் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விஜய்யின் மகன் என்பதால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே இருந்தது. ஆனால், தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தந்தை விஜய் ஆகியோரின் திரைப் பயணத்தில் இருந்து மாறுபட்ட பாதையை தேர்வு செய்து, இயக்குநராக தனது முதல் படத்தை உருவாக்கியுள்ளார்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ், கென் கருணாஸ் உள்ளிட்ட இயக்குநர்கள் நடிகர்களாகவும் கவனம் பெற்று வரும் நிலையில், ஜேசன் சஞ்சய்யும் எதிர்காலத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
விஜய்யின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனக்கென தனி சினிமா அடையாளத்தை உருவாக்க ஜேசன் சஞ்சய் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளிலும் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்.
தெலுங்கில் பிரபல தொகுப்பாளர் சுமாவுக்கும், தமிழில் டிடி நீலகண்டனுக்கும் அவர் பேட்டி அளித்துள்ளார். டிடி நீலகண்டனுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் அதிகமான கவனத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பரத்வாஜ் ரங்கனுக்கும் ஜேசன் சஞ்சய் சிறப்பு பேட்டி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சிக்மா’ திரைப்படம் முதலில் ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது படம் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ‘அய்யோ அம்மாடி’ 2வது சிங்கிள் அறிவிப்புடன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
விஜய் மகன் என்ற எதிர்பார்ப்பை தாண்டி இயக்குநராக ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் என்ன காட்டப்போகிறார் என்பதே ‘சிக்மா’ மீதான முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
A super update on the film Sigma directed by Jason Sanjay When is the release Fans are eagerly waiting