தமிழக உரிமை பிரச்சனைகளில் தனுஷ் குரல் கொடுப்பாரா? அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு தயாராகும் நடிகர் தனுஷ்!
Will Dhanush speak up on issues concerning Tamil Nadu rights Actor Dhanush gears up for his next political move
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர் பேசத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதி வாரியாக தனுஷ் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், அரசியல் விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்திப்பதுடன், அவர்களுக்கு விருந்து வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பள்ளிப் பைகள், பெண்களுக்கு பட்டு சேலைகள் வழங்கப்படுவதுடன், தனுஷின் பிறந்தநாளையொட்டி ஏராளமானோருக்கு ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. மேலும், தனுஷின் அலுவலகத்தில் தொடர்ந்து உணவு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் தொடங்கி வைத்ததாகவும், இயக்குநர் சுப்ரமணியம் சிவா இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷின் இந்த தொடர்ச்சியான நலப்பணிகள், விஜய்யை தொடர்ந்து தனுஷும் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளாரா என்ற விவாதத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தனுஷ் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகள் வெறும் நற்பணி நடவடிக்கைகளுடன் நிற்காமல், ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தனுஷின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக உரிமைகள் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து தனுஷ் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கத் தொடங்குவார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தின் உரிமை, நீர்வளம், விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் எழும்போது, அவை குறித்து தனுஷ் அறிக்கைகள் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் சார்ந்த பிரச்சனை உருவாகும் பட்சத்தில், தனுஷ் நேரடியாக போராட்டக் களத்திற்கும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நற்பணி, ரசிகர் மன்ற கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை என செயல்பட்டு வந்த தனுஷ், அடுத்ததாக தமிழக அரசியல் மற்றும் உரிமை சார்ந்த விவகாரங்களில் தனது குரலை பதிவு செய்யத் தொடங்கினால், அவரது அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும்.
கொடி அறிமுகம், நலத்திட்டப் பணிகள், தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கை... தற்போது தமிழக உரிமை பிரச்சனைகளில் குரல் கொடுக்கத் தயாராகிறார் என்ற தகவல் என தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள், அவரது அரசியல் வருகை குறித்த விவாதத்தை தமிழக அரசியல் களத்தில் மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
English Summary
Will Dhanush speak up on issues concerning Tamil Nadu rights Actor Dhanush gears up for his next political move