சொந்த நிலமே இல்லை... ஆனால் கிரயம் பேசுறார்...! நாகர்கோவிலை அதிரவைத்த ரூ.34 லட்சம் நில மோசடி...!
He doesnt own any land but he talks about the price 34 lakh land scam that shook Nagercoil
நாகர்கோவிலில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.34 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காஞ்சீபுரம் மாவட்டம் குளப்பாக்கம், ஊனமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 58). குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் வங்கியில் பணிபுரிந்து வரும் தனது மகளுக்காக நாகர்கோவிலில் வீடு கட்டுவதற்கு நிலம் தேடி வந்துள்ளார்.
அப்போது, நாகர்கோவில் பால்பண்ணை அருகே நடுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தி (43) என்பவர் ஜெயந்திக்கு அறிமுகமானதாக தெரிவிக்கப்படுகிறது.அவர், கட்டையன்விளை பகுதியில் தனக்கு சொந்தமாக சுமார் 11 சென்ட் காலி மனை இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் ஜெயந்தியிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 11 சென்ட் நிலத்துக்கு ரூ.1 கோடியே 38 லட்சம் வழங்கினால் கிரயம் செய்து தருவதாக கூறியுள்ளார்.இதனை நம்பிய ஜெயந்தி, முதற்கட்டமாக ரூ.34 லட்சத்தை காந்தியிடம் கொடுத்துள்ளார்.பணத்தை வழங்கிய பின்னர், ஜெயந்தி அந்த நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது, காந்தி தெரிவித்தபடி அந்த நிலம் அவருக்கு சொந்தமானது அல்ல என்பது தெரியவந்தது.
மேலும், அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர் ஏற்கனவே அதனை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, தான் வழங்கிய ரூ.34 லட்சத்தை திருப்பித் தருமாறு காந்தியிடம் கேட்டுள்ளார்.ஆனால், பணத்தை திருப்பி வழங்காமல் காந்தி காலம் தாழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெயந்தி புகார் மனு அளித்தார்.இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவினருக்கு காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் சுந்தர் தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில், நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.34 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து காந்தியை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
He doesnt own any land but he talks about the price 34 lakh land scam that shook Nagercoil