'மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறி போலி நாடகம்'...! - எப்.சி.ஆர்.ஏ. தீர்மானத்திற்கு எதிராக கர்ஜித்த நயினார் நாகேந்திரன்...!
fake drama claiming oppose central government Nayinar Nagendran roared against FCRA resolution
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தேவையற்ற அரசியல் விளம்பர நடவடிக்கை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மதங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவின் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் தற்போது மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே 1976-ம் ஆண்டு இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.பின்னர் காலச்சூழலுக்கு ஏற்ப 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு புதிதாக கொண்டு வந்த சட்டம் போலவும், சிறுபான்மையினரின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை தடுக்கும் நடவடிக்கை போலவும் சித்தரிக்க தமிழக அரசு முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முறையாக பதிவு செய்தல், சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு நிதியைப் பெறுதல், பெறப்படும் நிதி மற்றும் அதன் செலவினங்கள் குறித்த முறையான கணக்குகளை சமர்ப்பித்தல் போன்றவற்றை உறுதி செய்வதற்கான விதிமுறைகளே தற்போதைய திருத்த மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியை முடக்குவது அல்லது அவற்றின் சமூகநலப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது இதன் நோக்கம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நலத்திற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, எந்த நோக்கத்திற்காக வழங்கப்படுகிறதோ அதற்காகவே முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த அமைப்புக்கு கிடைத்த வெளிநாட்டு பங்களிப்புகள் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற 2010-ம் ஆண்டு நடைமுறையில் புதிய திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பதிவு ரத்து செய்யப்பட்ட அமைப்பு பின்னர் தனது பதிவை மீண்டும் பெற்றுக்கொண்டால், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதி மற்றும் அந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட அமைப்பிடம் மீண்டும் முழுமையாக ஒப்படைக்கப்படும் வகையில் புதிய திருத்த மசோதா வழிவகை செய்கிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பையும், சமூக நலப்பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் உரிமைகளையும் ஒருசேர பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த திருத்த மசோதா அமைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு நிதி எவ்வாறு பெறப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதில் தெளிவும் கண்காணிப்பும் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அரசியல் ஆதாயத்திற்காகவும் வாக்கு அரசியலை கருத்தில் கொண்டும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை எதிர்க்கும் போக்கை மாற்றுக்கட்சிகள் கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணிகள் ஆகிய இரண்டையும் சமநிலையுடன் பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை அணுக வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
fake drama claiming oppose central government Nayinar Nagendran roared against FCRA resolution