சொன்னது என்ன ஆச்சு? தமிழக அரசின் முடிவால் அதிர்ச்சியில் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஜனநாயகம் தழைக்க சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலங்களில் கூறி வந்த  திமுகவின் அரசு, இப்போது திடீரென அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஆணையிடக்கோரி பல்வேறு காலகட்டங்களில் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின்முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர்,  இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார். இது தமிழக அரசு இதற்கு முன் மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.

அவையில் உறுப்பினர்கள் உரையாற்றும் போது, அதில் இடம்பெறும் நாகரிகமற்ற சொற்களையும், தனிநபர் தாக்குதல்களையும் நீக்க வேண்டியிருப்பதாகவும், அதனால் தான் நேரலை செய்ய முடியவில்லை  என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. நாடாளுமன்ற நிகழ்வுகளிலும் ஒளிபரப்பான உரைகளில் இருந்து பல பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் செய்ய முடியும். அதற்காக  அவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய இயலாது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும்,  தங்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு உண்டு.  எனவே, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. 2016-ஆம் ஆண்டு முதல்  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  தேர்தல் அறிக்கைகளில் பேரவை நிகழ்ச்சிகளை  நேரலை செய்யப்படும்;  சட்டப்பேரவை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

2021-&ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுகவும் இதே வாக்குறுதிகளை அளித்திருந்தது. திமுக தேர்தல் அறிக்கையில்  375-ஆம் வாக்குறுதியாக நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் கூட்ட நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதைப் போன்று  தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்றும்,  376-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறைந்தது 100 நாட்களுக்கு  மேல்  நடப்பது உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இந்த இரு வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

கடந்த காலங்களில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள்  அவையிலேயே எழுப்பப்பட்ட போது, கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதாகவும், படிப்படியாக அனைத்து நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்றும் பேரவைத் தலைவரே உறுதியளித்திருந்தார். ஆனால், திமுக அரசு அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்வதில் முன்னேற்றம் இல்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12-ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதேபோல், சட்டப்பேரவைக் கூட்டத்தை குறைந்தது 100 நாட்களுக்கு நடத்துவதாக அளித்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டில் 27 நாட்கள்,  2022 ஆம் ஆண்டில் 34 நாட்கள், 2023 ஆம் ஆண்டில் 29 நாட்கள் மட்டுமே அவை நடந்திருக்கிறது. 

ஆண்டுக்கு 100 நாட்கள் அவையை நடத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில். மொத்தமாக  மூன்றாண்டுகளில் சேர்த்தும் கூட 80 நாட்களுக்கு மட்டும் தான் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 7 துறைகளில் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, அதில் 7 பேர் கூட பேசாமல் விவாதம் நடத்தும் நடைமுறை தான் தமிழ்நாட்டில் இப்போது உள்ளது. இது ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்காது.

நாடாளுமன்றத்திலும்,  கோவா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் போது, தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

இதே வினாவை எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அவை நிகழ்ச்சிகள் இரு நிமிடங்கள் தாமதமாகவாவது நேரலை செய்வது குறித்து தமிழக அரசு ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  அதையேற்று தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்யவும், 100 நாட்களுக்கு அவைக் கூட்டத்தை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNGovt for TNAssembly Live issue 2024


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->