திமுகவை கழட்டி விடுகிறாரா திருமாவளவன்? வெளியான அதிகாரபூர்வ செய்தி!
DMK VCK Alliance issue Vanniyarasu open talk
பாஜக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிமுக அறிவித்ததுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி இடம் மாறலாம் என்று சொல்லப்படுகிறது.
முக்கியமாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்த திருமாவளவன் திமுக கூட்டணியிலிருந்து அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
கூட்டணி மாறுவது திருமாவளவனுக்கு இது புதிது அல்ல, ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா?
அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர்.
திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள், திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்டபோதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.
ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே. இச்சூழலில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தவுடன், விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும்.
அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
English Summary
DMK VCK Alliance issue Vanniyarasu open talk