சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு௧ மீண்டும் சென்னை வரும் பியூஷ் கோயல்..நிர்வாகிகளை சந்திக்கும் எடப்பாடி..அதிமுகவில் நடப்பது என்ன?
Heated seat sharing Piyush Goyal returns to Chennai meets executives in Edappadi what happening in AIADMK
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையில் அரசியல் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி நிலை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி தற்போது ஒருங்கிணைந்த நிலையில் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே உறுதியாக இணைந்துள்ளது. தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்பான நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாகாததால், கூட்டணி அமைப்பில் நிச்சயமின்மை நீடித்து வருகிறது. குறிப்பாக தேமுதிக அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்ப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சிக்கலாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி குறித்து இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.இதனால், இந்த விவகாரங்களை விரைவாக முடித்து தேர்தல் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார்.
பாஜக தரப்பும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அந்த வகையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது அவர் மீண்டும் ஜனவரி 4 மற்றும் 5 தேதிகளில் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது, எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகளை எடுக்க பாஜக முயற்சி மேற்கொள்ளும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பியூஷ் கோயல் வருகைக்கு முன்பாகவே அதிமுக தரப்பின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க, இன்று காலை 10 மணிக்கு சென்னை எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு மட்டுமல்லாமல், வேட்பாளர்கள் பட்டியலையும் இறுதி செய்யும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் அமையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில், பியூஷ் கோயல் வருகை மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
Heated seat sharing Piyush Goyal returns to Chennai meets executives in Edappadi what happening in AIADMK