தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஜிகேஎம் தமிழ்க்குமரன் வெற்றி – 788 வாக்குகள் பெற்று சாதனை! வெற்றி பெற்றவர்கள் லிஸ்ட்!
Producers Council Election GKM Tamilkumaran wins record 788 votes List of winners
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026–2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்காக சுமார் 100 பேர் போட்டியிட்டனர்.
இம்முறை இராம நாராயணன் அணி மற்றும் ‘நலம் காக்கும்’ அணி ஆகிய இரண்டு அணிகள் மோதின. இதில் ‘நலம் காக்கும்’ அணி சார்பில் தயாரிப்பாளர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஜிகேஎம் தமிழ்க்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதுவரை நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். லைகா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அவர், இந்த வெற்றியின் மூலம் சங்கத்தில் புதிய பொறுப்பை ஏற்கிறார்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வென்றார். இவர் நடிகர் ரவி மோகனின் முன்னாள் மாமியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வரும் மூன்று ஆண்டுகளில் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த திசையில் நகரும் என்பது திரைப்படத் துறையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Producers Council Election GKM Tamilkumaran wins record 788 votes List of winners