சினிமாவில் இருந்து ஓய்வா? பராசக்தி தான் கடைசி படமா?– சுதா கொங்கராவின் பேட்டி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


‘பராசக்தி’ படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பெண்கள் இயக்குநர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள சுதா கொங்கராவின் இந்த கருத்து, திரையுலகிலும் விவாதமாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்தினம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கொங்கரா, ‘துரோகி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து மாதவனை வைத்து இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் தேசிய அளவில் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் தேசிய விருதையும் வென்று சுதா கொங்கராவை முன்னணி இயக்குநர்களின் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது.

‘இறுதிச்சுற்று’ வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கினார். 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் அபாரமான வரவேற்பைப் பெற்றதுடன், ஆறு தேசிய விருதுகளையும் குவித்தது. குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்த படம் இதுவாகும்.

இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள முக்கியமான படமாகும். ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர உள்ளது. சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறு என பேசப்பட்ட நிலையில், சமீபத்திய பேட்டியில் சுதா கொங்கரா அதை மறுத்துள்ளார். ‘பராசக்தி’ என்பது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், ‘சூரரைப் போற்று’ போலவே உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை கதையென்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் புரமோஷன் பேட்டியில் அவர் வெளியிட்ட இன்னொரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எல்லா வகையான கதைகளையும் படமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், சோர்வு காரணமாக விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அவர் இன்னும் சில கனவுகளை பகிர்ந்துள்ளார். ஒரு முழுநீள காதல் கதையை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அதற்கான கதை தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகை என கூறிய சுதா கொங்கரா, அவரை வைத்து ‘முதல் மரியாதை’ போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவுக்கு ஓய்வு குறித்து அவர் எடுத்துள்ள முடிவு எவ்வளவு தீவிரமானது என்பது வரும் காலத்தில்தான் தெரியவரும் என்றாலும், தமிழ் சினிமா ஒரு முக்கியமான இயக்குநரை இழக்கப்போகிறதா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Retirement from cinema Is Parasakthi the last film Sudha Kongara interview leaves fans in shock


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->