ஐபிஎல் 2026ல் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலேயே அசத்தும் சிஎஸ்கே? – “மினி இந்திய அணி” என ஆகாஷ் சோப்ரா புகழாரம்
Will CSK be amazing in IPL 2026 without foreign players Akash Chopra praises them as a mini Indian team
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மீண்டும் வலுவான கம்பேக் கொடுக்கத் தயாராகி வருகிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே, கடந்த சீசனில் மோசமான செயல்பாட்டால் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு காரணமான சில வீரர்களை விடுவித்த நிர்வாகம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.
இதனிடையே, 44 வயதாகும் மகேந்திர சிங் தோனி 2026 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2026 ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் பெரும்பாலும் இளம் மற்றும் தரமான இந்திய வீரர்களையே வாங்கியுள்ளது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலேயே போட்டியிடும் அளவுக்கு சிஎஸ்கே அணியின் இந்திய அடித்தளம் வலுவாக உள்ளது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணியை “மினி இந்திய அணி” என புகழ்ந்துள்ளார். அவர் பேசுகையில், “சிஎஸ்கே அணியின் தேர்வு மிகவும் சுவாரசியமாக உள்ளது. அவர்களின் பிளேயிங் லெவனை பார்த்தால், ஒரு முழுமையான இந்திய அணியையே அமைக்க முடியும். உங்களுக்கு ஒரு அல்லது இரண்டு வெளிநாட்டு வீரர்களே போதுமானவர்கள் போலத் தெரிகிறது” என்றார்.
மேலும் அவர், “டாப் ஆர்டரில் ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவார்கள். அதற்குப் பிறகு தேவால்ட் ப்ரேவிஸ், சிவம் துபே, கார்த்திக் சர்மா ஆகியோர் இடம்பிடிப்பார்கள். இதனால் டாப் 6 முழுவதும் நிரம்பிவிடும். துபேவுக்குப் பின் அல்லது தோனிக்கு முன் பிரசாந்த் வீர் விளையாடலாம். இந்த அமைப்பில் டாப் 8 வீரர்களில் ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் மட்டுமே இருப்பார்” என்று கூறினார்.
பந்துவீச்சு வரிசையைப் பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, “9வது இடத்தில் நூர் அஹ்மத், 10 மற்றும் 11வது இடங்களில் கலீல் அகமது, நாதன் எலிஸ் ஆகியோர் விளையாடலாம். அன்சுல் கம்போஜை இம்பேக்ட் வீரராக பயன்படுத்த முடியும். இந்த அமைப்பில் சிஎஸ்கே அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே களமிறக்கினாலே போதும்” என்றார்.
மொத்தத்தில், 2026 ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர்களை மையமாகக் கொண்டு, சிஎஸ்கே புதிய முகத்துடன் களமிறங்கி மீண்டும் கோப்பை வேட்டையில் தீவிரமாக ஈடுபடப் போகிறது என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
English Summary
Will CSK be amazing in IPL 2026 without foreign players Akash Chopra praises them as a mini Indian team