ஆட்சி வந்தால் தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் மீண்டும் செயல்படுத்தப்படும் – திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி உறுதி - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் திட்டமும், அம்மா மினி கிளினிக் திட்டமும் மீண்டும் தொடங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தீவிர பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, எடப்பாடி பழனிசாமி பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

திருத்தணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “செவ்வாய்தோறும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனத்துக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளூர் மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த வசதியை திமுக அரசு நிறுத்தி விட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த சேவை மீண்டும் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 210 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டமும், அம்மா மினி கிளினிக் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும்” என உறுதியளித்தார்.

திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருந்தது. ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டுமே வளமாகியுள்ளது. மின்சார கட்டணம், வீட்டு வரி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “தங்களை மன்னர் பரம்பரையாக நினைத்துக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் ஆட்சியை, ஜனநாயக முறையில் வேரறுக்கும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமையும். அதிமுக ஆட்சியின் மூலம் தமிழக மக்கள் மீண்டும் மக்களாட்சியை நிறுவப் போகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகள், தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If the government comes to power the Amma Mini Clinic will be reactivated Edappadi Palaniswami assures in Tiruttani


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->