நீ தான் டிஎம்-மா..? "அரசு அதிகாரியை லூசு என திட்டிய திமுக எம்எல்ஏ".. பொது நிகழ்ச்சியில் சலசலப்பு..!!
DMK MLA udhayasuriyan insulted government official
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரகோட்டாலத்தில் மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று (ஏப்ரல்-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் சென்றிருந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் பொழுது தங்கள் பகுதியில் பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன் போக்குவரத்து துறை சார்பாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு விரைவில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்" என தெரிவித்தார்.

அப்பொழுது "போக்குவரத்துத்துறை டி.எம் வந்திருக்கிறாரா... எங்கே இருக்கிறார்?" என கேட்க, அப்போது மேடை பகுதியில் இருந்த கள்ளக்குறிச்சி பணிமனை அதிகாரி "சார் இங்கே" என கூற, "நீ தான் டி.எம்-மா... கண்டெக்டர், டிரைவர் எங்கே?" என கேட்டார். அதற்கு அந்த அரசு அதிகாரி "டி.ம் மெட்ராஸ் போயிருக்காரு சார்" பதில் அளித்தார்.
அதே சமயம், இந்த நிகழ்ச்சி சங்கராபுரம் பகுதியில் நடப்பதால், அப்பகுதியின் பணிமனையை சேர்ந்த போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர், "இதோ இருக்கிறேன் சார்" என்று மேடையின் எதிரில் இருந்து பதிலளித்தார். யார் எப்பகுதி அதிகாரி என்றும் அறியாமல், கோபப்பட்ட திமுக எம்எல்ஏ கீழே இருந்து பதிலளித்த போக்குவரத்துத்துறை அதிகாரியை லூசு என திட்டியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திமுக எம்எல்ஏ-வின் இந்த செயலை பாத்த மேடையில் அமர்ந்திருந்த மற்ற அதிகாரிகளும், பொதுமக்களும் முகம் சுளித்தனர். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் திமுக எம்எல்ஏ உதயசூரியன் அரசு விழாவில் போக்குவரத்து துறை அதிகாரியை அநாகரிகமாக திட்டிய சம்பவம் நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனு கொடுக்க வந்த மூதாட்டியிடம் கோபமாக "ஏய்.. உட்காருமா" என அதட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் தூக்கத்தை கெடுத்து கெடுப்பதாக புலம்பிய நிலையில் உடன்பிறப்புகள் மீண்டும் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டனரா என பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்
English Summary
DMK MLA udhayasuriyan insulted government official