செஞ்சி அரசு பள்ளியில் 167 மாணவர்கள் 100/100 மதிப்பெண்! சந்தேகம் எழுப்பும் பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் வியப்போடு அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த தேர்ச்சி விகிதத்தை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு கல்வி துறை அதிகாரிகளும் பாராட்டியிருப்பது கல்வியை வைத்து இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

இது போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை மாணவர்களிடம் அளித்திருந்தால் கூட 167 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விடைகளை முன்னரே தயார் செய்து மாணவர்களிடத்தில் கொடுத்து விட்டனரா? அல்லது விடைத்தாள்களே மாற்றி வைக்கப்பட்டனவா என்ற கேள்விகளும் எழாமலில்லை. 

பள்ளிக் கல்வி என்பது முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டுமேயன்றி, முறைகேடாக மதிப்பெண்களை அள்ளிக் கொட்டி அடுத்த தலைமுறையை திறனற்றவர்களாக உருவாக்குவது வெட்கக்கேடு;  இளைய சமுதாயத்தை நாசமாக்கும் செயல். கல்வியை  வியாபாரமயமாக்கிய திராவிட மாடல், அரசியல் மயமாக்கியும் விட்டது கொடுஞ்செயல். மாணவர்களுக்கு அறிவை போதித்து, அவர்களிடத்திலே உள்ள திறமைகளை கண்டறிந்து, அந்த திறமைகளை சமுதாய வளர்ச்சிக்கு, தேச முன்னேற்றத்திற்கு, எதிர்கால கட்டமைப்புக்கு  பயன்படுத்த வேண்டிய ஆசிரிய சமுதாயம், முறையாக பயிற்றுவிக்காமல் இப்படி முறைகேட்டில் ஈடுபட்டு மதிப்பெண்களை அள்ளி வழங்குவது ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலேயன்றி வேறில்லை. இதற்கு முழு பொறுப்பையும் ஆசிரியர்கள், கல்வித்துறை மற்றும் மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட பாடம் குறித்து அறியாமலே அல்லது புரியாமலே தேர்வு எழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எப்படி கல்வியை முறைப்படி கற்பார்கள்? பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அதிக  மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட  வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதற்கு காரணம்,  இது போன்ற அரசியல் அராஜகங்களினால் தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் மகன் மெத்த படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஆதங்கப்படும் பெற்றோர்கள், அதற்கு காரணம் தரம் இல்லாத கல்வி தான் என்பதை உணர வேண்டும். இயல்பாக படித்து தேர வேண்டிய மாணவர்களை செயற்கையாக மதிப்பெண்கள் பெற வைப்பது மாணவர்களை சீரழிக்கும் செயல் என்பதையும் அடுத்த தலைமுறையை ஒழிக்கும் செயல் என்பதையும் அரசு உணர வேண்டும். 

100/100 மற்றும் 99 பெற்ற மாணவர்கள், நீட் போன்ற தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற காரணமே மாணவர்களுக்கு உரிய கல்வியை போதிக்காமல், மதிப்பெண்களை மட்டுமே வழங்கி சீரழிப்பதால் தான் என்பது தெளிவாகிறது. 100 மதிப்பெண்கள் பெற்றவர் எப்படி நீட் தேர்வில் தோல்வியுறுவார் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த மோசடி, முறைகேடே பதில்.

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இந்த முறைகேடுகளை களைந்து, தரமற்ற கல்வி முறையை அகற்றி, முறையான கல்வியை நம் மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நம் அடுத்த தலைமுறை முன்னேறும் என்பதை திராவிட மாடல் அரசு உணரட்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Say About Chenji Govt School result


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->