பிகார் தேர்தல்: பாஜக கூட்டணி வெற்றிக்காக மல்லுக்கட்டி நிற்கும் இண்டி கூட்டணி! மொத்தம் எத்தனை தொகுதிகள் தெரியுமா?!
bhihar election 2026 indi alliance
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது உறுதியானது. 243 இடங்களுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.
முதல்கட்டத் தேர்தலுக்கான மனுத் தாக்கல், மனுத் திரும்பப்பெறும் காலம் முடிவடைந்த நிலையில், எதிரணிக்குள் தொகுதி ஒப்பந்தம் சிக்கலில் சிக்கியது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உடன்பாடு எளிதில் எட்டப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.
இதன் விளைவாக, ஆரம்பத்தில் 14 தொகுதிகளில் கூட்டணிக்குள் நட்பு போட்டி நிலவியது. பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வியாழக்கிழமை தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். ஆனால், உட்பகை குறித்த விவகாரத்தில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
நேற்று மாலை மனுவைத் திரும்பப் பெறும் அவகாசம் முடிவடைந்த நிலையில், நான்கு வேட்பாளர்கள் மட்டுமே மனுவை வாபஸ் பெற்றனர். வாரிசலிகஞ்ச், பிரான்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள், பாபூபர்ஹி தொகுதியில் விகாஸ்ஷீல் இன்சான் வேட்பாளர் விலகினர். இதனால், 10 தொகுதிகளில் மட்டும் கூட்டணிக்குள் நேரடி மோதல் நீடிக்கிறது.
ஒரே கூட்டணிக்குள் எதிர்மறை போட்டி நீடிப்பது, அந்த பகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு வலுவான சூழலை உருவாக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
English Summary
bhihar election 2026 indi alliance