விஜயகாந்த்தை கிண்டலடித்த லொள்ளு சபா டீம்..அழைப்பு விடுத்த விஜயகாந்த்..அறைக்குள் திக் திக் மொமண்ட்! நடந்தது என்ன?
Lollu Sabha team teased Vijayakanth Vijayakanth made the callTik Tik moment in the room What happened
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் முதன்மையானது லொள்ளு சபா. சினிமா படங்களை நகைச்சுவையாக ரோஸ்ட் செய்து மக்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி, பல திறமையாளர்களை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்திய தளமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் இயக்குநரான ராம்பாலா சமீபத்தில் பகிர்ந்த நினைவுகள், குறிப்பாக விஜயகாந்த் குறித்து கூறிய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி, வாரா வாரம் வெளியாகும் திரைப்படங்களை நகைச்சுவை கோணத்தில் விமர்சிப்பதே அதன் தனிச்சிறப்பு. யார் நடித்த படம் என்ற பேதமின்றி, அனைத்துப் படங்களும் கலாய்க்கப்பட்டன. ஒருவகையில், தமிழ் மீடியா உலகில் சினிமாவை ரோஸ்ட் செய்யும் கலாச்சாரத்தை ஆரம்பித்த நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்தானம், யோகிபாபு, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் சினிமாவுக்கு அறிமுகமாகினர். இவர்களுக்கெல்லாம் ஒரு வகையில் “காட்ஃபாதர்” எனக் கருதப்படுபவர் ராம்பாலாதான்.
ஆனால், இந்த ரோஸ்ட் கலாச்சாரம் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியதாக ராம்பாலா கூறியுள்ளார். முன்னதாக விஜய் நடித்த படத்தை ரோஸ்ட் செய்தபோது, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதேபோல், மற்றொரு நிகழ்ச்சியில் பல நடிகர்களை கிண்டல் செய்தபோது, விஜயகாந்தையும் ரோஸ்ட் செய்ததாக ராம்பாலா கூறினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் தரப்பிலிருந்து அழைப்பு வந்ததாம். ராம்பாலா மற்றும் அவரது குழுவினர் பதட்டத்துடன் சந்திக்கச் சென்றபோது, விஜயகாந்த் ஃபைட் ரிகர்சலில் இருந்தாராம்.
“எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்றீங்களாமே?” என்று விஜயகாந்த் கேட்டபோது, “பேலன்ஸாகத்தான் செய்கிறோம் சார். ஹீரோக்களும் பதிலடி கொடுக்கும்படி ஸ்க்ரிப்ட் இருக்கும்” என்று விளக்கம் அளித்தார்களாம். அதற்கு விஜயகாந்த், “நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்று அமைதியாக அனுப்பிவைத்ததாக ராம்பாலா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது விஜயகாந்த் எடுத்த அணுகுமுறையை ரசிகர்கள் மீண்டும் நினைவுகூரச் செய்துள்ளது. ராம்பாலா பகிர்ந்த இந்த அனுபவம், லொள்ளு சபா காலத்து நினைவுகளை மீண்டும் கிளப்பியதோடு, “கேப்டன்” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்தின் தனித்துவத்தையும் மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
English Summary
Lollu Sabha team teased Vijayakanth Vijayakanth made the callTik Tik moment in the room What happened