''ராகுல் காந்தியை சந்திப்பதால் முதல்வருக்குதான் நேரம் வீண்''; நயினார் நாகேந்திரன் ..!
Nainar Nagendran stated that meeting Rahul Gandhi is a waste of time for the Chief Minister
''முதல்வராவது மக்கள் மத்தியில் நடிக்கிறார். ராகுல் காந்திக்கு அரசியல்வாதியாக நடிக்கவும் தெரியவில்லை. ராகுல் காந்தி இந்தியாவை விட்டுச் சென்றாலே, இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது.''என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.10) கோவை சென்ற அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;
மக்கள் தீர்ப்பை வரவேற்கிறோம். 1989-க்கு பிறகு, இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்று வருகிறது. அதன்படி, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெக வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், 04 மாதங்களுக்கு முன் வேறு கட்சியில் வெற்றி பெற்று, ராஜினாமா செய்து மீண்டும் வேறு கட்சியில் சேர்வது ஆரோக்கியமான ஜனநாயகமாக பார்க்க முடியாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது என்று தெரிவித்ததோடு, தேர்வு செய்யப்பட்டுள்ள 02 பேரும் இனிமேலாவது அவர்கள் சுயநலமாக இருக்காமல், மக்கள் பிரச்சினைகளை பார்க்கட்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், வரலாறு தெரியாமல் சிலர் பாஜக குறித்து பேசுகின்றனர். 1998-இல் அதிமுகவுடனும், 1999-இல் திமுகவுடனும் பாஜக கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள செல்வாக்கை இடைத்தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளனர். தவெக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்மையை தான் பேசுகின்றனர் என்றும், இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து கட்சிகளின் ஓட்டு சதவீதத்தை கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 04 மாத தவெக அரசில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், 05 மணி நேர மின்தடை ஏற்படுகிறது என்றும், வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர் என்றும், இது எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதி நெருக்கடி அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, செவிலியர் போராட்டம் தொடர்பாக தவெக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுத்தனர், ஆளும்கட்சியாக வந்தபோது ஒரு நிலைப்பாடு எடுக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் முறையால் வெற்றி பெற்றுள்ளதாக கேரளா காங்கிரஸை சேர்ந்த ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் மூலம் 12 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், அதில் 02 கோடி உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் சொர்க்கத்திலும், நரகத்திலும் உள்ளனர். அவர்களை அழைத்து ஓட்டு போட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். அவரைத்தான் அனுப்பி அவர்களை அழைத்து வர சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். முதல்வரை சந்திக்கிறார். இதனால் முதல்வருக்குதான் நேரம் வீண் என்று தெரிவித்துள்ளதோடு, முதல்வராவது மக்கள் மத்தியில் நடிக்கிறார். ராகுல் காந்திக்கு அரசியல்வாதியாக நடிக்கவும் தெரியவில்லை என்று சாடியதோடு, தடுப்புகள் மீது ஏறி நிற்கும் அவரின் மனநிலை எப்படியிருக்கும் பாருங்கள். ராகுல் காந்தி இந்தியாவை விட்டுச் சென்றாலே, இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து அதில் பயணிக்கிறார். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடி-யில் பிரைன் சென்டர் ஆராய்ச்சியை தொடங்கி வைக்கிறார். பள்ளி நிகழ்விலும் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் மாலை திரும்புகிறார் என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran stated that meeting Rahul Gandhi is a waste of time for the Chief Minister