வேறு வழியில் வெற்றிபெற முடியாது என்பதால் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நாட்டை பலவீனப்படுத்த சதி செய்கிறார்கள்; சிவராஜ் சிங் சவுகான் சாடல்..!
Shivraj Singh Chouhan says that opposition parties are conspiring to weaken the country with the support of foreign forces
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிஜேபி அமைப்பினர், இடதுசாரி மாணவர் இயக்கம் உள்ளிட்டவை டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.
இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால், டெல்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது;
நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக மக்களின் அன்பையும் ஆசியையும் பெற்றது.
இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் வெறும் வெற்றிகள் அல்ல. இவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்டிஏ மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நம்பிக்கை வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குமான நம்பிக்கை என்றும், வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதும், அதை நாம் செய்து முடிப்போம் என்பதுமே எங்கள் உறுதிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒருபுறம் மக்கள், வளர்ந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடியுடன் நிற்கிறார்கள். மறுபுறம், தோல்வியால் விரக்தியும் மனச்சோர்வும் அடைந்த எதிர்க்கட்சிகள், களத்தில் வெற்றிபெற முடியாமலும், மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமலும் இப்போது வீதிகளில் குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்ப முயல்கின்றன என்று விமர்சித்துள்ளார். அவை அரசியலமைப்பு நிறுவனங்களைச் சிதைக்கின்றன என்றும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்க்க சதி செய்கின்றன என்றும், அரசியலமைப்பையே சீர்குலைக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள், இவை அனைத்தையும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் செய்கின்றன என்றும், இது குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்புவதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி, சதி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வேறு வழியில் வெற்றிபெற முடியாது என்பதால், அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கும் தாழ்ந்து செல்வார்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது என்றும், நமது தொழில்முனைவோர்கள் முன்னேறிச் செல்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளிநாட்டினரை ஆதரிக்கிறார், இது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் இயல்பாக மாறிவிட்டது. அவர்கள் நாட்டை பலவீனப்படுத்த சதி செய்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.
English Summary
Shivraj Singh Chouhan says that opposition parties are conspiring to weaken the country with the support of foreign forces