#சேலம் || திமுக பேரூராட்சி தலைவிக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய முடிவு..!!
DMK councilors decided to resign against DMK municipal president
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த கவிதா தலைவராகவும் மற்றும் அவருடைய கணவர் ராஜா கவுன்சிலராகவும் உள்ளார். தம்மம்பட்டி பேரூராட்சியில் பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் கவிதாவின் நடவடிக்கைகளுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பேரூராட்சி கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கு தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப் படாத பணிகளுக்கு போலி பில் தயாரித்து கூட்டத்தில் தீர்மானத்திற்கு வைத்துள்ளதாக கூறி அந்த தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் நடராஜன், செந்தில், திருச்செல்வம், பழனி முத்து, புவனேஸ்வரி, லட்சுமி ஆகியோர் பேரூராட்சி தலைவரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேரூராட்சி செலவினங்களை தணிக்கை துறையினர் ஆய்வு செய்த பிறகே தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட முடியும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் பேரூராட்சி தலைவர் கவிதா கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவர் கவிதா மற்றும் அவருடைய கணவர் ராஜா ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த தம்மம்பட்டி போலீசார், கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து பேசிய தம்மம்பட்டி கவுன்சிலர்கள் "பேரூராட்சி கூட்டம் கடந்த 5 மாத மாக நடைபெறவில்லை என போராட்டங்களை செய்து வந்தோம். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா செய்யப்படாத வேலைக்கு போலியாக பில் தயார் செய்து மன்ற கூட் டத்தில் எங்களிடம் ஒப்புதல் பெற வைத்திருந்தார். இதை மறுத்து கேள்விகள் நாங்கள் எழுப்பினோம்.
பதில் அளிக்க மறுத்துவிட்டு கூட்டத்தை ஒத்திவைத்து விட்டார். மேலும் நாங்கள் இது சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் பலமுறை புகார் செய்தும் யாரும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வரவில்லை. இதனால் திமுக பேரூராட்சி தலைவி கவிதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகார் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவைச் சேர்ந்த 15 வார்டு கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளனர்.
English Summary
DMK councilors decided to resign against DMK municipal president