#கரூர் || ஐடி அதிகாரிகளை தாக்கிய விவகாரம்.. திமுகவினர் ஜாமீன் கோரி மனு தாக்கல்..!!
DMK cadres files bail plea in IT officials assaulted case
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவருடைய உறவினர்கள் வீடு, டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகம், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த மே 26ஆம் தேதி கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்ட போது கரூர் மேயர் கவிதா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 4 வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் டிச்சார்ஜ் ஆன நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை குற்ற புலனாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 18 பேரை காவல்துறையினர் தற்போது வரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 திமுகவினர் சார்பாக ஜாமின் வழங்க கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. திமுகவினரின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK cadres files bail plea in IT officials assaulted case