தீபாவளி பண்டிகை: 4,390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
Diwali Festival Permission granted to 4,390 firecracker shops
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 578 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்தன. இதில் 4 ஆயிரத்து 390 பட்டாசு கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர், தீயணைப்பு துறையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே, பிற துறைகளிடம் சான்றிதழ் பெற முடியும்.
அந்தவகையில், நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கோரி தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 578 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 4 ஆயிரத்து 390 பட்டாசு கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் அடுத்த 10 நாட்களில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படுகிறது. தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளுக்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம், கேளிக்கை அரங்கம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் இருப்பதால் பட்டாசு கடைகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
English Summary
Diwali Festival Permission granted to 4,390 firecracker shops